தி.மு.க ஆட்சியின் சாதனை ! 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு - சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

Published Date: March 29, 2023

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

அதிமுக ஆட்சியின் விதி 110 கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விதி 110-ன் கீழ் மட்டுமே 3 லட்சத்து 27 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1704 அறிவிப்புகளை வெளியிட்டார்கள் எனவும், ஆனால் அதற்கு நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான 27 சதவீத திட்டங்கள் மட்டும்தான் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆளுநர் உரை அறிவிப்புகள் 78, முதலமைச்சர் 161 அறிவிப்புகளை தனியாகவும், இதர அறிவிப்புகளாக 46 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டதோடு விதி 110-ன் கீழ் 67 அறிவிப்புகளையும், மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு சென்றபோது 88 அறிவிப்புகளும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 5 அறிவிப்புகளும், நிதிநிலை அறிக்கையில் 338 அறிவிப்புகளையும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் 330 அறிவிப்புகள் என்று மொத்தம் 3 ஆயிரத்து 537 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 3038 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதாவது 86 சதவீத திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 63 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு 39 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 24 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் விவரித்தார் நிதித் துறை அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன்.

Media: Viduthalai